Tuesday, January 25, 2011

ஆத்திசூடி


     இது ஒவையார் அருளிய ஆத்திசூடி. நமக்கு 10 முதல் 15 ஆத்திசூடி தான் தெரிந்து இருக்கும். ஆனால் ஒவையார் அருளிய ஆத்திசூடி மொத்தம் 109. இந்த ஆத்திசூடிகளை பொருளுடன் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

1. அறம் செய விரும்பு.
   நல்ல தருமத்தைச் செய்ய ஆசைப்படு.

2. ஆறுவது சினம்.
   அடக்கிக் கொள்ள வேண்டியது கோபம்.

3. இயல்வது கரவேல்.
   கொடுப்பதற்கு முடிந்த பொருளை மறைக்காமல் கொடு.

4. ஈவது விலக்கேல்.
  மற்றொருவர்க்குப் பிறர் கொடுப்பதைத் தடுக்காதே.

5. உடையது விளம்பேல்.
   உன்னிடத்தில் இருக்கும் உடைமைப்பொருள்களை வெளிப்படையாகப் பிறரிடத்தில் பேசாதே.

6. ஊக்கமது கைவிடேல்.
   காரியத்தில் உறுதியான மனவலிமையைக் கைவிடாதே.

7. எண் எழுத்து இகழேல்.
   கணக்கையும் இலக்கணத்தையும் இகழாமல் கற்றுக்கொள்.

8. ஏற்பது இகழ்ச்சி.
   பிறரிடம் யாசிப்பது பெருமைக்குத் தாழ்வு ஆகும்.

9. ஐயம் இட்டு உண்.
   பசித்தவர்க்கு உணவு கொடுத்தபின் உண்பாயாக.

10. ஒப்புரவு ஒழுகு.
    உலக மக்கள் நிலைமையறிந்து நடந்து கொள்.

11. ஓதுவது ஒழியேல்.
   படிப்பதை எக்காலத்துக்கும் விட்டுவிடாதே.

12. ஒளவியம் பேசேல்.
   பொறாமை கொண்டு பேசாதே.

13. அஃகம் சுருக்கேல்.
   தானியங்களை அளவு குறைத்துப் பிறர்க்கு விற்காதே.

14. கண்டொன்று சொல்லேல்.
   பேசும் போது கண்டபடி பேச்சை மாற்றிப் பேசாதே.

15. ஙப்போல் வளை.
   போல நீ சிறந்தவனாக இருந்து உன் இனத்தைச் சுற்றி வளைத்துக் காப்பாயாக.  

   ங என்ற எழுத்து வரிசையில் ஙி,ஙீ...ஙௌ முதலிய எழுத்துக்கள் எங்கும் வருவதில்லை. அங்ஙனம், இங்ஙனம், அங்கு, இங்கு முதலிய சொற்களில் ‘ஙதனியாகவும் ‘ங்என்று புள்ளி பெற்றும் வருகின்றன. ‘ஙஎன்ற ஒரே எழுத்திற்காக ஏனைய ‘ஙி’, ‘ஙீ’, ‘ஙு’, ‘ஙூமுதலிய எழுத்துக்களை வைத்துக் கொண்டுள்ளோம். ‘ஙஏனைய தன் இன எழுத்துக்களைக் காப்பாற்றி வருகின்றது. அதுபோல் நீ சிறந்தவனாக இருந்து உன் இனத்தைச் சுற்றி வளைத்துக் காப்பாயாக.  

16. சனி நீராடு.
   குளிர்ந்த நீரில் குளிப்பாயாக.

17. ஞயம்பட உரை.
   அனைவரிடமும் இனிமையாகப் பேசு.

18. இடம்பட வீடு எடேல்.
    பிறர்க்கு இடையூறாகப் பெரிதாக வீட்டைக் கட்டாதே.

19. இணக்கம் அறிந்து இணங்கு.
    நல்லவரிடத்தில் நட்புக் கொள்.

20. தந்தை தாய்ப் பேண்.
    பெற்றோர்களை மதித்துக் காப்பாற்று.

21. நன்றி மறவேல்.
    பிறர் செய்த உதவியை மறக்காதே.

22. பருவத்தே பயிர் செய்.
    உரிய காலத்தில் காரியங்களைச் செய்.

23. மன்று பறித்து உண்ணேல்.
    நீதி மன்றத்தில் கையூட்டுப் பெற்று வாழாதே.

24. இயல்பு அலாதன செயேல்.
    நல்லறிவிற்கு மாறான காரியங்களைச் செய்யாதே.

25. அரவம் ஆட்டேல்.
    வீண் ஆரவாரமான காரியங்களைச் செய்யாதே.

                                           தொடரும்...............


4 comments:

Samudra said...

ங விளக்கம் அருமை..

வெங்கட் நாகராஜ் said...

நிறைய பேருக்கு ஆத்திச்சூடி மறந்து போய்விட்டது. உங்கள் பகிர்வுக்கு நன்றி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

அருமையான பகிர்வு. நன்றி.

!♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

சிறப்பு . பகிர்ந்தமைக்கு நன்றி

Post a Comment